இந்தியா ஒரு ஆன்மீக பூமி. பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும் சிறந்த சிற்பக்கலை கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஸ்தலங்களும் அதிகமாக இருக்கின்றது. இன்றளவும் அவை பராமரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு பழமை வாய்ந்த கோவிலுக்கு நாம் சென்றாலும் அங்கு கட்டாயம் தெப்பக்குளம் ஒன்று இருக்கும். முன்னோர்கள் மன்னர்கள் ஏன் கோவிலோடு சேர்த்து தெப்பக்குளத்தை கட்டி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

ஒவ்வொரு பழைய காலத்து கோவிலுக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். அதில் நிறைய படிக்கட்டுகளை கொண்டு கட்டி இருப்பர். அந்த காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என்று கோவில் இருந்திருக்கிறது. மழைநீர் சேகரிப்பு என்ற ஒன்றை மையப்படுத்தி தான் மன்னர்களும் முன்னோர்களும் தெப்பக்குளத்தை கட்டியிருக்கிறார்கள். எப்போதெல்லாம் ஊருக்குள் வறட்சி ஏற்படுகிறதோ அப்போது தெப்பக்குளத்தின் நீரை பயன்படுத்துவது போல் அமைத்திருக்கிறார்கள். மழைநீர் ஒரு சதவீதம் கூட வீணாகாமல் தெப்பக்குளத்தில் சேரும் வகையிலும் வடிவமைத்திருக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் அந்த தெப்பக்குளத்தில் இருக்கும் நீர் அசுத்தமாகாமல் அதுவே வடிகட்டி சுத்தமான நீரை தருவது போன்றும் வைத்திருக்கின்றனர். குளங்களில் உலர்ந்த இலைகள் குச்சிகள் போன்றவற்றை வைத்து வடிகட்டி குழாய்களையும் வைத்திருந்தனர். இதனால் சுத்தமான நீர் மட்டுமே தெப்பக்குளத்தில் சேர்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் கோவில் தெப்பக்குளத்தில் மீன்களை வளர்ப்பதற்கு காரணம் அது சுத்தமாக இருக்கிறதா இல்லை நஞ்சு ஏதும் கலந்து இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அதை வளர்த்திருக்கின்றனர்.

அப்படி அறிவியலுடன் கட்டப்பட்ட தெப்பக்குளத்தை எந்த மக்களும் அசுத்தப்படுத்தி விட கூடாது சுத்தமாக தான் அதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதற்கு பஞ்ச கல்யாணி தீர்த்தம் அஷ்ட தீர்த்தம் பத்ம தீர்த்தம் என ஆன்மீகத்துடன் மன்னர்கள் பெயரிட்டனர். இப்படி நம் முன்னோர்கள் அறிவியலை ஆன்மீகத்துடன் சேர்த்து வழங்கியதால் மக்கள் அதை பயபக்தியுடன் பின்பற்றினர். இதுதான் ஒவ்வொரு கோயில்களிலும் தெப்பக்குளம் அமைத்து உள்ளதாற்கான காரணம் ஆகும். நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமடைய வைக்கிறது.
