காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25), தனது நண்பர்களான கோகுல் மற்றும் மாதவனுடன் மது அருந்தியபோது, கோகுலின் மனைவி குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சகோதரர்களான கோகுலும் மாதவனும் சேர்ந்து விஜயகுமாரின் தலையில் கல்லைப் போட்டுத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த விஜயகுமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடையே மதுபோதையில் மோதல் வெடித்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி இரவு சந்திரன் மற்றும் மெர்லின் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சக தொழிலாளர்கள் அவர்களை விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும் ஆத்திரம் குறையாத சந்திரன், நள்ளிரவில் மெர்லினைப் பழிவாங்கத் தேடியுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த மனோகரனை, மெர்லின் எனத் தவறாக நினைத்து சென்ட்ரிங் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
விடிந்த பிறகு சக தொழிலாளர்கள் போர்வையைப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்த மனோகரனை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஆள் மாறாட்டத்தால் நடந்த இந்த கொடூரக் கொலை குறித்துத் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரனைக் கைது செய்துள்ளனர். மதுவின் தாக்கத்தால் நண்பர்களுக்கிடையேயும், சக தொழிலாளர்களுக்கிடையேயும் ஏற்பட்ட இந்த மோதல்கள் இரண்டு உயிர்களைப் பலிவாங்கியிருப்பது அந்தந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
