தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு வேலைக்காக இளைஞர்கள் பலரும் தயாராகி வருகிறார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் இலட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தப் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தால் வேலை கிடைக்கும். இதனால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் தனியாக பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். ஆனால் அனைத்து தேர்வர்களாலும் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாது. பொருளாதார ரீதியாக அவர்களால் பயிற்சி வகுப்பில் சேர முடியாத சூழல் உருவாகிறது.
இதற்காக தமிழக அரசு போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது. இதன் மூலம் தேர்வர்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வருகின்ற டிசம்பர் 8 முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் அரசு பணி போட்டி தேர்வர்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்த ஐந்து நாட்களும் காலை 7:00 மணி முதல் காலை 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெற உள்ளது. மேலும் TN Career Service Employement என்ற யூடியூப் சேனல் வாயிலாகவும் மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை காண முடியும். மேலும், Tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த இவ்வணைத்து தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
