மத்திய அரசின் சிறப்பு நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் 5 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் (கைரேகை, கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘பால் ஆதார்’ அட்டையில் பயோ-மெட்ரிக் பதிவுகள் இருக்காது என்பதால், அவர்கள் 5 வயதைக் கடக்கும்போதும், பின்னர் 15 வயதை எட்டும்போதும் கட்டாயமாகப் பயோ-மெட்ரிக்கை அப்டேட் செய்ய வேண்டும். இதற்காகக் கடந்த செப்டம்பர் 2025 முதல் மாநில அரசுகளுடன் இணைந்து, நேரடியாகப் பள்ளிகளுக்கே சென்று முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் ஆதார் விவரங்கள் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பயோ-மெட்ரிக் புதுப்பிப்புச் சேவையை இணையவழியில் செய்ய முடியாது என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேரடியாக ஆதார் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதற்காக மத்திய அரசு கடந்த ஓராண்டாக ரத்து செய்திருந்த கட்டண விலக்கு சலுகை, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாக பயோ-மெட்ரிக்கை அப்டேட் செய்ய இதுவே கடைசி வாய்ப்பாகும். பெற்றோர் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையங்களை ‘புவன் ஆதார் போர்டல்’ மூலம் எளிதாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.
ஆதார் மையத்திற்குச் செல்லும்போது குழந்தையின் ஆதார் அட்டையை எடுத்துச் செல்வது அவசியமாகும். மையத்தில் குழந்தையின் புதிய புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழிப் படலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, ‘புதுப்பிப்பு கோரிக்கை எண்’ அடங்கிய ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்திப் புதுப்பித்தலின் நிலையைக் கண்காணித்துக் கொள்ளலாம். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே இந்த இலவசச் சலுகை நடைமுறையில் இருக்கும் என்பதால், பெற்றோர்கள் காலதாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளின் ஆதார் பயோ-மெட்ரிக் விவரங்களை விரைவாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
