“அம்மா, என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க”…. 4 மாத கர்ப்பிணி கதறிய சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்… பதறியடித்து ஓடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் ஷேக் தாவூத் என்பவரின் 21 வயது மகள் ஆஃப்ரின். இவருக்கும், திருப்பத்தூர் மூலைக்கடை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான சாக்ளாவின் மகன் முகமது அஷ்ரப் (30) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், ஆஃப்ரின் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கணவர் வீட்டில் வசித்து வந்த ஆஃப்ரின், கடந்த ஜூன் 16-ஆம் தேதி இரவு தனது தாய் பாத்திமா பீவிக்கு அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அம்மா, என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க” என்று கதறியுள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி தாய் ஆறுதல் படுத்தியுள்ளார்.

மறுநாள் (ஜூன் 17) காலையில் ஆஃப்ரினின் தாய் மகளைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஆஃப்ரின் தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டதாகத் தாயாருக்கு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்ந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடனடியாக திருப்பத்தூர் நகர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆஃப்ரினின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். திருமணமாகி சில மாதங்களிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால், சட்டப்படி கோட்டாட்சியர் (RDO) விசாரணையும் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்டது.

   

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் மாமனார் சாக்ளா ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகியாக இருந்ததால், சிவகங்கை அல்லது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்தால் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காது என்று ஆஃப்ரினின் பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆஃப்ரினின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஜூன் 19 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மரணத்திற்குப் பின்னணியில் இருக்கும் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை மகளின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றோர் மறுத்துவிட்டதால், உடல் மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

   

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவர் முகமது அஷ்ரப் எப்போதும் மொபைல் போனைப் பார்த்துக் கொண்டே இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த சண்டைகளின் போது, அஷ்ரப் தனது மனைவியை மிகக் கொடூரமாகப் பேசி தற்கொலைக்குத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதும் அம்பலமானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், 4 மாத கர்ப்பிணியான ஆஃப்ரினை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவர் முகமது அஷ்ரப்பை திருப்பத்தூர் நகர் போலீசார், சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.