திருநெல்வேலி மாவட்டம் மேல இழந்தகுளம் பகுதியில் இயங்கி வந்த திருச்சபையின் பங்குத்தந்தையாக பணியாற்றிய ஆபிரகாம் (47) என்பவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு திருச்சபைக்கு வருகை தந்த நான்கு சிறுமிகளை அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் எழுந்த புகாரின் பேரில் தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பங்குத்தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இத்தீர்ப்பு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
