தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடி அருகே, பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று சாலையோரக் கடைகளுக்குள் புகுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. தமிழகத்திலிருந்து மின்சார உபகரணங்களை ஏற்றி வந்த அந்த லாரி, வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென பின்னோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தில், எதிரிலிருந்த மூன்று கடைகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன.
விபத்து நிகழ்ந்த தருணத்தில் கடைகளின் அருகில் நின்றுகொண்டிருந்த சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், லாரி கட்டுப்பாடின்றி வருவதைக் கண்டு அலறியடித்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்த நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வரும் நிலையில், குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
