விஜய் வைத்த ‘செக்’.. அடுத்தடுத்து தாவும் முன்னாள் அமைச்சர்கள்… முடிவுக்கு வரும் இபிஎஸ் சகாப்தம்?… அதிமுகவை ஒட்டுமொத்தமாக காலி செய்யும் தவெக..!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல் களத்தையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. தற்போது உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக நகரும் வேளையில், இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது அதிமுக தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில வாரங்களாகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்தத் தொடர் தாவல்களால் அதிமுகவிற்குள் அதிருப்தியும் சலசலப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிமுக தற்போது சந்திக்கும் இந்த நெருக்கடி ஒரே நாளில் உருவானது அல்ல; கடந்த ஏழு ஆண்டுகால தவறான அரசியல் முடிவுகளின் விளைவுதான் இது என்கின்றனர் அக்கட்சியினரே. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள், 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் எனத் தொடர்ச்சியான பின்னடைவுகளை அதிமுக சந்தித்துள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, தொடர் பிளவுகள் மற்றும் தலைமைச் சிக்கல்கள் தொண்டர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்திய சூழலில், புதிய சக்தியாக விஜய் உருவெடுத்ததை அதிமுக தலைமை சரியாக மதிப்பிடத் தவறிவிட்டது என்ற கடுமையான விமர்சனமும் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது.

   

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த நிர்வாகிகளின் கட்சித் தாவலைத் தடுப்பது குறித்தே முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி “திமுக தான் நமது பிரதான எதிரி; தவெக அல்ல” என்ற நிலைப்பாட்டையே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தவெகவை நேரடியாகத் தாக்காமல் தவிர்க்கும் இந்த முடிவு கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தவெக ஆளுங்கட்சியாக மாறியுள்ள சூழலில், தங்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வாய்ப்புகளைக் கருதி, நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்வதே தற்போதைய உண்மையான சவாலாக இருப்பதாக பெரும்பாலான அதிமுகவினர் கருதுகின்றனர்.

   

தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் முன் இரண்டு மிக முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, தவெகவை நோக்கிச் செல்லும் நிர்வாகிகளைத் தடுத்து கட்சியில் தக்க வைப்பது; இரண்டாவது, விரக்தியில் உள்ள தொண்டர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது. இதற்கு வெறும் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மட்டும் போதாது, கட்சி அமைப்பை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்கி, புதிய தலைமுறையை ஈர்க்கும் வகையில் அதிமுகவின் அரசியல் அடையாளத்தையே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.