அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், இன்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட தலைமை மோதலின் போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த அவர், தற்போது திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில், குறிப்பாக திருச்சி மண்டலத்தில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
வெல்லமண்டி நடராஜன் நீண்ட காலமாக அதிமுகவின் விசுவாசியாக இருந்து வந்தவர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, பின்னர் மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய அதிமுக ஆட்சியில் அவருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதிமுகவின் அடிமட்டத் தொண்டராக இருந்து அமைச்சராக உயர்ந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் தனது மகனுக்குப் போட்டியிட வாய்ப்பு கேட்டபோதும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், பின்னர் அதிமுக உடைந்தபோது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். ஓபிஎஸ் அணியின் திருச்சி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதுடன், திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய பிரம்மாண்ட மாநாட்டிற்கு முக்கியத் தூணாக இருந்து செயல்பட்டார்.
தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்த மற்றொரு முக்கியத் தலைவரான வைத்திலிங்கத்துடன் இணைந்து வெல்லமண்டி நடராஜன் திமுகவில் இணைய உள்ளார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் செல்வாக்கு மிக்க இத்தகைய மூத்த தலைவர்கள் ஆளுங்கட்சியான திமுகவிற்குத் தாவுவது, வரும் தேர்தல்களில் அதிமுகவிற்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திருச்சியில் அதிமுகவின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு நகர்வாகவே வெல்லமண்டி நடராஜனின் இந்த அணி மாற்றம் பார்க்கப்படுகிறது.
