தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்கள், தேர்தல் காய்ச்சலை இப்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில வாரங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தவெகவின் பார்வை தற்போது ஆளும் திமுகவின் பக்கமும் திரும்பியுள்ளதாக பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரையைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர், விஜய்யின் தவெகவில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் செய்தி, அறிவாலயத் தரப்பை யோசிக்க வைத்துள்ளதோடு, தமிழக அரசியலின் முக்கிய பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.
