BREAKING NEWS: ஒரே நாளில் 54 பேருக்கு அரசு வேலை… எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த மெகா முறைகேடு அம்பலம்… சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தார்மீக ஆதரவோடு கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 2021 பிப்ரவரி மாதம், 69 காலிப்பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 440 பேருக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த அதே நாளில் (பிப்ரவரி 8) தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டு, அடுத்த நாளே அவர்கள் பணியிலும் சேர்ந்தனர். சட்டப்பூர்வமான ‘நியமனக் குழுவை’ புறக்கணித்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணி வழங்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த நாடகத்தை எதிர்த்து, கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் ஈஸ்வரி என்ற பெண்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, மாநகராட்சி நிர்வாகம் செய்த அதிர்ச்சியூட்டும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. வேலைவாய்ப்பு விளம்பரம் ‘மக்கள் குரல்’ நாளிதழில் வெளியிடப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்ட போதிலும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அசல் நாளிதழில் அப்படி ஒரு விளம்பரமே இல்லை என்பதும், நீதிமன்றத்தை ஏமாற்ற இ-பேப்பரில் மட்டுமே அது போலியாகச் சேர்க்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒரே நாளில் 440 பேரின் சான்றிதழ்களைச் சரிபார்த்து, மதிப்பெண் வழங்கி, தேர்வுப் பட்டியலைத் தயாரித்து, ஆணையரின் ஒப்புதலோடு பணி ஆணை வழங்கிய “கணினி வேக” முறைகேட்டை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். மாநகராட்சி விதிகளின்படி மூன்றில் ஒரு பங்கு இடங்கள் நான்காம் நிலை ஊழியர்களுக்கான பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதால், துப்புரவுப் பணியாளரான மனுதாரருக்கு இந்த முறைகேட்டை எதிர்க்க முழு தகுதி உள்ளதையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

   

இந்த நெறியற்ற செயல் தகுதியான பொதுமக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் அநீதி என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தது. ஒட்டுமொத்த தேர்வு செயல்முறையையும் ‘செல்லாது’ என அறிவித்த நீதிமன்றம், உரிய விதிகளைப் பின்பற்றி, புதிய விளம்பரம் கொடுத்து வெளிப்படையான முறையில் புதிய தேர்வு செயல்முறைகளை உடனடியாகத் தொடங்க கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணிகளில் அதிகார பலத்தால் பின்வாசல் வழியாக நுழைய நினைப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், சாமானிய பெண்ணின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் அமைந்துள்ளது.