ஜம்முவில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண விழாவில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான கமல் சிங் ஜம்வால் என்பவர், ஃபரூக் அப்துல்லாவை நோக்கித் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இலக்கு தவறியதால் அவர் உயிர் தப்பினார். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
“Wanted to kill Farooq Abdullah since 20 years, had a chance today, failed at it.”: Attacker Kamal Singh Jamwal in Police Station. #FarooqAbdullah https://t.co/YqjvnFk7Il pic.twitter.com/sZaESBIWHf
— Sai Ram B (@SaiRamSays) March 12, 2026
கைது செய்யப்பட்ட கமல் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 20 ஆண்டுகளாக ஃபரூக் அப்துல்லாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “அவரைத் தீர்த்துக்கட்டுவதே எனது தனிப்பட்ட லட்சியம்; அவர் இன்று உயிர் பிழைத்தது அவரது அதிர்ஷ்டம்” என்று அவர் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், இதில் பயங்கரவாதத் தொடர்புகள் ஏதுமில்லை என்றும், தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் மது போதையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில், கமல் சிங் ஜம்வால் பின்னால் இருந்து ஃபரூக் அப்துல்லாவை நெருங்கித் துப்பாக்கியை நீட்டுவதும், ஒரு முறை சுடுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
