தமிழ்நாடு கல்வித் துறையை உலுக்கியுள்ள தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில், நாளுக்கு நாள் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் அமைப்பு நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த குற்றச்சாட்டில், அதன் தலைவர் பி.டி. அரசகுமார் சமீபத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் படையினர் நடத்திய தீவிர விசாரணையில், சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் DTCP/CMDA சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த ஒரு முன்னாள் அமைச்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நிழல் நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் இந்த லஞ்சப் பணம் கைமாறியிருப்பதை ஆதாரங்களுடன் காவல்துறை கண்டறிந்துள்ளது.
பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்பட்ட பெருந்தொகை, அரசு அதிகாரிகளையும் அரசியல் பிரமுகர்களையும் திருப்திப்படுத்தவே பயன்படுத்தப்பட்டதாக அரசகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நேரடியாகத் தொடர்புடைய அந்த முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கு விரைவில் சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த ரூ.200 கோடி நிதிப் பரிவர்த்தனைகளின் பின்னணியை முழுமையாக ஆராய வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியை நாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆட்சிக் கால முறைகேடுகள் குறித்து பல்வேறு விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நிதி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரின் பெயர் அடிபடுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி வாக்குறுதிகள் மற்றும் மிரட்டல்கள் மூலம் வசூலிக்கப்பட்ட லஞ்சப் பணம் யார் யாருக்கெல்லாம் சென்று சேர்ந்தது என்பதை வெளிக்கொண்டு வரக் காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
