எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்… நான் அப்பவே சொன்னேன்… சிஐஏவின் ex தலைவர் வெளியிட்ட பகீர் தகவல்….!

By Nanthini on பங்குனி 23, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்பாடுகளை ஒசாமா பின்லேடன் வேட்டையை வழிநடத்திய முன்னாள் சிஐஏ தலைவர் லியோன் பனேட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த மாதம் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடு உடனடியாக சரணடைந்துவிடும் என்று டிரம்ப் நிர்வாகம் போட்ட கணக்கு தப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முறையான திட்டமிடல் இல்லாததால் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு டிரம்ப் ஒருவரே முழு காரணம் என்று பனேட்டா ‘தி கார்டியன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் சாடியுள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி, தனது தந்தையை விடவும் மிகவும் கடுமையான போக்கைக் கொண்டவர் என்பது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இளம் தலைவரான மொஜ்தபா நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்பதால், இனி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கருதப்படுகிறது. நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கிய டிரம்ப், தற்போது அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, தான் முன்பு புறக்கணித்த நாடுகளிடமே உதவி கோர வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று பனேட்டா குறிப்பிட்டுள்ளார்.

   

ராணுவ ரீதியாகவும் ஈரான் அமெரிக்காவிற்கு கடும் அதிர்ச்சி அளித்து வருகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை அழித்துவிட்டதாக டிரம்ப் அறிவித்த பின்னரும், உலகின் அதிநவீன ‘எப் 35’ போர் விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது. ஈரானின் உண்மையான ராணுவ பலத்தை கணிக்க முடியாமல் அமெரிக்கப் படைகள் திணறி வருகின்றன. இதற்கிடையே, இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

   

பொருளாதார ரீதியாக, உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பது அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் இந்த வழியாகத்தான் செல்கிறது என்பதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவிற்குள் டிரம்பிற்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்புகளை வலுப்படுத்தியுள்ளது. முன்கூட்டியே கணிக்கப்பட வேண்டிய இந்தச் சூழலைத் திட்டமிடத் தவறியது டிரம்ப் நிர்வாகத்தின் அடிப்படைத் தோல்வி என லியோன் பனேட்டா தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.