தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்து 75 நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அக்கட்சி திணறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய், சாத்தியமே இல்லாத 326 வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், தவெகவில் இருக்கும் நிர்மல் குமார் என்பவர் அதிமுகவின் உளவாளி என்றும், அவர் வெகு விரைவில் தவெகவை அழித்துவிட்டு மீண்டும் அதிமுகவிற்கே திரும்பிவிடுவார் என்றும் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய தமிழக மின்வெட்டுப் பிரச்சினைக்கு அவரே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் கண் துடைப்பாக மாறிவிட்டன என்று சாடிய ஆர்.பி. உதயகுமார், குறிப்பாக மின்சார வாரியத்தின் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டினார். மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை மாற்றி, தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என அரசு ஏமாற்றியுள்ளது என்றார். இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் இருளில் மூழ்கியிருப்பதாகவும், மின்சாரத்தை தேடும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இரவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் தவெக அரசு சொன்னபடி செய்யாமல் விவசாயிகளுக்குப் பேரிடி கொடுத்துள்ளதாக அவர் சாடினார்.
அரசின் புதிய திட்டங்களான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ போன்ற திட்டங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் என ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார். சுமார் 750 கோடி ரூபாய் செலவில் தங்கம் வழங்குவது அன்னிய செலவாணி பாதிப்பு மற்றும் வர்த்தக பற்றாக்குறையை அதிகரித்து ரூபாயின் மதிப்பை வீழ்த்தும் எனக் குறிப்பிட்ட அவர், பள்ளி மாணவர் விடுதிகளில் உணவின் தரத்தை ஆய்வு செய்யும் அளவிற்கே தவெகவின் நிர்வாகத் திறன் சுருங்கிப் போயுள்ளது என்றார். மேகதாது அணைப் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் போன்ற முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லாமல், முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடச் சொல்லி அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருப்பது வேதனையின் உச்சம் என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
