திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் மின்னணு கைவிரல்ரேகை பதிவு சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் இதுவரை 91.3 சதவீதத்தினர் தங்களது பதிவுகளைப் புதுப்பித்துள்ள நிலையில், மீதமுள்ள 2,25,149 நபர்கள் உடனடியாக தங்களின் நியாய விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டையுடன் சென்று கைவிரல்ரேகை பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கைவிரல்ரேகை சரியாகப் பதியாதவர்கள், 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் நேரடியாக நியாய விலைக் கடைகளில் பதிவை மேற்கொள்ள இயலாது. அவர்கள் முதலில் வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையங்களை அணுகி, தங்களது பயோமெட்ரிக் (கைவிரல்ரேகை மற்றும் கண்பதிவு) விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதன் பின்னரே, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று மின்னணு கைவிரல்ரேகை பதிவு சரிபார்ப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
