ஹரியானா மாநிலம் குர்கிராமைச் சேர்ந்த பிரியங்கா கிரி என்ற பெண், தனது வீட்டின் சமையல்காரரைப் பணிநீக்கம் செய்த பிறகு, குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர் செய்த செயல் தொடர்பாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது சமையல்காரர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆளைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், அந்தச் செக்யூரிட்டி தனது மனைவியைச் சமைக்கச் சொல்லி, வீட்டு உணவை அந்தப் பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, பணம் எதுவும் வேண்டாம் என்றும் தினமும் உணவு அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பரிச்சயம் இல்லாத ஒருவரிடமிருந்து வந்த இந்த அதிரடிச் செயல் மற்றும் அவரது உரத்த குரலிலான பேச்சு தமக்கு பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக பிரியங்கா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையத்தில் நெட்டிசன்கள் இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், அந்தப் பாதுகாப்பு ஊழியர் தனது மனைவிக்கும் சமையல் வேலை கிடைக்கச் செய்யவே இவ்வாறு உதவியிருக்கலாம் எனக் கூறினாலும், பெரும்பாலானோர் அறிமுகமில்லாத நபர்களிடம் எல்லைகளை வகுத்துக் கொள்வதும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையோடு இருப்பதும் முற்றிலும் நியாயமே என்று அப்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
