அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ஏரின் பேட்டர்சன் என்ற பெண், தனக்கான வாழ்க்கைத்துணையைத் தேடுவதற்கு வழக்கமான டேட்டிங் செயலிகளை தவிர்க்கத் தீர்மானித்துள்ளார். அதற்குப் பதிலாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான ‘கூகுள் ஃபார்ம்’ ஒன்றை உருவாக்கி, அதைத் தனது சுயவிவரப் பக்கத்தில் இணைத்துள்ளார்.
டேட்டிங் செயலிகள் மூலம் நேர விரயம் மட்டுமே ஏற்படுவதாகக் கருதிய ஏரின், தீவிரமான எண்ணம் கொண்ட ஆண்களைக் கண்டறியவே இந்த ‘கணவர் விண்ணப்பப் படிவத்தை’ உருவாக்கியுள்ளார். அந்த விண்ணப்பத்தில் ஆண்களின் வேலை, லட்சியங்கள், தினசரி பழக்கவழக்கங்கள், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய பார்வைகள் என விரிவான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த விசித்திரமான கூகுள் ஃபார்மிற்கு இதுவரை 240க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். ஏரின் பேட்டர்சனின் இந்தத் தெளிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டி, பல இணையவாசிகள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
