அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இவர்கள் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை மீறி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் ஒருமுறை உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதுடன், தவெக அமைச்சரவையில் இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்படலாம் என்ற பரவலான பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தன.
இருப்பினும், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு எதிர்பார்த்தபடி இடம் மறுக்கப்பட்டதால், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர். இதனால் இவர்களின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அண்மையில் பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி கட்சிப் பிளவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தங்களுக்குள் இருப்பது வெறும் கருத்து வேறுபாடு மட்டுமே என்றும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமே கோரிக்கை வைப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், அதிமுகவே தங்களின் உயிர்மூச்சு என்றும், கட்சியை உடைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், எஸ்பி வேலுமணி முகாமில் இருந்த பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன் அதிருப்திப் பாதையைக் கைவிட்டு மீண்டும் இபிஎஸ் முகாமிற்குத் திரும்பியுள்ளார். தவெக ஆதரவு நிலைப்பாட்டை வேலுமணி தரப்பு எடுத்தபோது இபிஎஸ்ஸை விட்டு மாறிய மோகன், தற்போது மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியிருப்பது அதிருப்தி அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஏமாற்றமே இத்தகைய பின்வாங்கல்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் விரைவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்புவார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய நகர்வு நடந்துள்ளது. சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, சி.வி.சண்முகம் தரப்பினர் சமாதான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், மனம்மாறி அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இருப்பதாகத் தூது அனுப்பியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
