சென்னையில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் ‘காசிமேடு மீனவன்’ கவின், சாலை விபத்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 15 வயது சிறுமியைத் தாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்தச் சிறுமி மீது மோதிய கவின், அது குறித்துச் சிறுமி கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்து, சிறுமியின் வயிற்றுப் பகுதியில் கொடூரமாக எட்டி உதைத்துள்ளார்.
இதைக் கண்டு தடுக்க வந்த சிறுமியின் தந்தை நாகராஜ் மற்றும் உறவினர்களையும் அவர் தாக்கியதால், அந்த இடமே பெரும் போர்க்களமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கவினைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, கவினைக் கூட்டத்திடமிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவலர் ஒருவரின் மூக்குத் தண்டு உடைந்து காயம் ஏற்பட்டது. சிறுமிக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபட்ட கவின் மீது ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், கவினைத் தாக்கிய குற்றத்திற்காகச் சிறுமியின் தந்தை நாகராஜ் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதாரண வாகன விபத்து ஒரு பெரிய வன்முறையாக மாறியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
