ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபாடா வனப்பகுதிக்கு, ஷிபா பிரதான் என்ற சிறுவன் தனது மாமாவுடன் தேன் சேகரிக்கச் சென்றுள்ளான். அங்கு ஒரு பாறை இடுக்கின் ஆழமான பகுதியில் தேன் கூடுகள் இருப்பதைக்கண்டு, அதை எடுக்க முயற்சி செய்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அவனது தலை பாறை இடுக்குகளுக்கு இடையே மிக மோசமாகச் சிக்கிக்கொண்டது.
சுமார் எட்டு மணி நேரமாக அந்தச் சிறுவன் பாறை இடுக்கில் சிக்கித் தவித்துள்ளான். அவனது உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, அதே இடுக்கிற்குள் ஒரு விஷப் பாம்பு இருப்பதைக் கண்டு சிறுவன் கடும் பீதியடைந்துள்ளான். அவனது மாமா மற்றும் உள்ளூர் கிராம மக்கள் சிறுவனை மீட்க முயன்றும் பலன் அளிக்காததால், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு தீயணைப்புப் படை குழுக்கள் மிகவும் கவனமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு அருகிலேயே விஷப் பாம்பு இருந்ததால் மீட்புப் பணியில் பெரும் சவால் ஏற்பட்டது. இறுதியில், எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டான். ஒரு பயங்கரமான சூழலில் இருந்து சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
