தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 41 பேரின் மரணத்திற்கும் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளே காரணம் என ஆளும்கட்சியான திமுக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்தின் போது மதுபோதையில் ஒருவர் விழுந்ததில் குழந்தை உயிரிழந்ததாகவும், பரப்புரை வாகனத்தில் இருந்த விஜய் கீழே குதித்து அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார். மேலும், அங்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்ததாகவும், தாம் இச்செய்தியை வெளியிட்டதால் மட்டுமே அந்தப் படத்தில் அக்காட்சிகள் இடம்பெறவில்லை என்றும் நக்கீரன் கோபால் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறியிருந்தார்.
நக்கீரன் கோபாலின் இந்தப் பேச்சு தவெகவினர் மற்றும் விஜய் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நந்தகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில், முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கூறி சென்னை சைபர் கிரைம் போலீசார் நக்கீரன் கோபால் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் விவகாரத்தில் தன் மீது திமுகவினர் வீண் பழி சுமத்துவதாக முதல்வர் விஜய் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
