கனடாவின் எட்மண்டன் நகரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் இந்திய வம்சத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் சமராலா பகுதியைச் சேர்ந்த லால் கலான் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய தமன்ப்ரீத் கவுர். தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், எதிர்காலத்தை மாற்றவும் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு விசா பெற்று இவர் கனடா நாட்டிற்குச் சென்றார். பெற்றோருக்கு இவர் ஒரே மகளாவார். இவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகவே அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடம் பெரும் கடன்களை வாங்கியிருந்தனர்.
எட்மண்டன் நகரில் உள்ள சில்வர்பெரி பகுதியில் வசித்து வந்த தமன்ப்ரீத் கவுர், தில்லியின் இந்தியக் குடியுரிமை கொண்ட ரித்தேஷ் குமார் (22) என்பவருடன் இணைந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 9 ஆம் தேதி மாலை அந்த வீட்டிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த அவசரப் பிரிவு மருத்துவக் குழுவினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தமன்ப்ரீத் கவுரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜூலை 12 ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்து ஜூலை 14 அன்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று உறுதிப்படுத்திய எட்மண்டன் காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு ஜூலை 22 அன்று ரித்தேஷ் குமாரைக் கைது செய்தனர். மேலும், அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்களின் ஒரே மகளைப் பறிக்கொடுத்த துயரத்திலும், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியதன் மூலம் ஏற்பட்ட பெரும் கடன் சுமையிலும் தமன்ப்ரீத் கவுரின் பெற்றோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மகளின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர அரசு உதவ வேண்டும் என அவலக் குரல் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, கனடாவில் உள்ள இந்தியச் சமூகத்தினரும் ஊடகங்களும் இணைந்து, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க ‘GoFundMe’ மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
