பாஜகவில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தொடக்கம் முதலே தனக்கென ஒரு தனித்துவமான அரசியலையை முன்னெடுத்து வருகிறார். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, முதற்கட்டமாக பொள்ளாச்சியில் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோரைக் கூட்டி தன் பலத்தைக் காட்டியது. நீட் தேர்வு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை நேரடியாக விமர்சித்ததன் மூலம், தான் ஒரு சுயேச்சை அமைப்பாகவே இயங்கப்போகிறோம் என்பதை அவர் வெளிப்படையாகவே உணர்த்தினார்.
இந்தச் சூழலில், அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் ‘என் குமரி பசுமை குமரி’ என்ற பெயரில் தூய்மைப் பணி மற்றும் மக்கள் சந்திப்புத் திட்டத்தை அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். வழக்கமாக பாஜகவுக்கு அமைப்பு ரீதியாக வலுவான தளமாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலை காலடி எடுத்து வைப்பது, அக்கட்சியின் அடித்தளத்திற்கே சவாலாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக வி தி லீடர்ஸ் அமைப்பினர் கிராமம் கிராமமாகச் சென்று ஆதரவு திரட்டி வரும் நிலையில், பாஜக தரப்பில் தொண்டர்கள் அவருக்கு ஆதரவளிக்கக் கூடாது என தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நீட் விவகாரத்தில் மத்திய பாஜக அரசைச் சாடிய அண்ணாமலை, இந்த கன்னியாகுமரி நிகழ்வில் பாஜகவிற்கு எதிரான தனது விமர்சனக் கணைகளை மேலும் தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், அக்கட்சியின் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் கொள்கை சார்ந்த முரண்பாடுகளை அவர் வெளிப்படையாகக் கிழத்தெடுப்பார் என விவரம் அறிந்த அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த நகர்வு தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. தேசியக் கட்சிகளை முதன்மையாகக் குறிவைத்து விமர்சித்துவிட்டு, அதற்குப் பிறகே மாநிலக் கட்சிகளை நோக்கித் தனது கவனத்தைத் திருப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுதான் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தக்க தருணம் வரும் வரை பொறுமையாகவும் நிதானமாகவும் காய்களை நகர்த்தி, தமிழக அரசியலில் ஒரு வலுவான சக்தியாகத் தன் அமைப்பை உருவெடுக்க வைக்க அண்ணாமலை வியூகம் அமைத்து வருகிறார்.
