“அளந்து இன்னும் கொஞ்சம் வரி போடவா…?” வணிகரை மிரட்டிய பெண் அதிகாரி… சிக்கிய பிறகும் நக்கலாக சிரித்த பெண்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராதா தேவி என்பவர், ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாரிக் என்ற வணிகருக்குச் சொந்தமான கட்டிடத்திற்கான சொத்து வரி ரூ.1 லட்சத்திற்கு மேல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைச் சீரமைத்துத் தருவதற்காக அவர் அதிகாரியை அணுகியுள்ளார். அப்போது, ராதா தேவி வரியைக் குறைக்க ரூ.20,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் தராவிட்டால் ஒட்டுமொத்த வர்த்தக வளாகத்தையும் ‘இன்ச் டேப்’ வைத்து அளந்து இன்னும் அதிக வரி போடுவேன் என மிரட்டியுள்ளார்.

   

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, ரசாயனம் தடவிய ரூ.20,000 பணத்தை ராதா தேவி வாங்கியபோது அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, எவ்வித பயமும் கூச்சமும் இன்றி அந்தப் பெண் அதிகாரி நக்கலாகச் சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.