நடுங்க வைக்கும் அதிகாலைக் காட்சி… ரயில் தண்டவாளத்தில் ஆடையின்றி மீட்கப்பட்ட பெண் சடலம்…. அரியலூரை உலுக்கிய பகீர் சம்பவம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விருத்தாச்சலம் சரக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட பெண்ணின் தலை, கை மற்றும் கால்கள் கடுமையாக சிதைந்த நிலையில் காணப்பட்டன. மேலும், அவரது உடலில் எந்தவித ஆடையும் இல்லாதது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்ணின் ஆடைகள் அல்லது வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று போலீசார் நீண்ட தூரம் வரை தீவிர சோதனை நடத்தியும், இதுவரை எந்தவொரு முக்கிய தடயமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உடற்கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

   

இந்த கொடூர மரணம் குறித்து ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்தப் பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு விபத்து போல சித்திரிக்க தண்டவாளத்தில் உடல் வீசப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நகர்கிறது. மேலும், உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரா என்பதைக் கண்டறிய, அருகிலுள்ள காவல் நிலையங்களில் உள்ள காணாமல் போனோர் புகார்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.