காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாக்கி (12) ஆகிய மூவரும் சகோதரிகள் ஆவர். இந்த வழக்கின் பின்னணியை ஆராயும் போது, இவர்களின் தந்தை சேத்தன் குமார், சுஜாதா, ஹீனா, டீனா ஆகிய மூன்று சகோதரிகளை மணம் முடித்து ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. பங்குச்சந்தை தரகரான சேத்தன் குமார் சுமார் 2 கோடி ரூபாய் கடனில் இருந்ததால், மின்கட்டணம் செலுத்தக்கூட பணமின்றி மகள்களின் செல்போன்களை விற்றுள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமிகள் பள்ளிக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்கொலை விவகாரத்தில் மற்றொரு மர்மமான கோணமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது தற்கொலை என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கிற்கும், தற்போதைய சிறுமிகளின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தலைமையிலான குழு தீவிர விசாரணை நடத்த உள்ளது. தந்தை சேத்தனின் மனநிலை மற்றும் குடும்பப் பின்னணியை ஆராயவே இந்தப் பழைய வழக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் தற்கொலை செய்த அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 8 பக்க டைரி, இந்த மரணங்களில் உள்ள மற்றொரு மர்மத்தை உடைத்துள்ளது. அந்தச் சிறுமிகள் கொரிய கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததுடன், தங்களுக்குக் கொரியப் பெயர்களையும் சூட்டிக்கொண்டுள்ளனர். ஆன்லைன் வழியாக ஏதோ ஒரு விபரீத கொரிய விளையாட்டுப் போட்டியில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அந்த விளையாட்டின் தூண்டுதலால் அல்லது அதன் இறுதிப் பகுதியாகவே அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 2:15 மணியளவில், தங்களின் செல்போன்களை பறித்ததற்காக பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே சிறுமிகள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துள்ளனர். தந்தை மீதான பொருளாதார மற்றும் தனிப்பட்ட சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும், சிறுமிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் விளையாடிய கேம்கள் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இணையதள விளையாட்டுகளின் தாக்கம் மற்றும் குடும்பச் சூழல் குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
