ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சௌடேஸ்வரி, தனது குடும்பத்தினர் பார்த்த வசதியான வரனை மறுத்துவிட்டு, தனது காதலன் நாகராஜுவை திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சந்திரசேகர், திருமணமான சில வாரங்களிலேயே சமரசம் பேசுவதாகக் கூறி சௌடேஸ்வரியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு தனது உறவினரின் உதவியுடன், சௌடேஸ்வரியின் நெஞ்சில் அமர்ந்து அவரை மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என்று பதிவு செய்யப்பட்டு சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில் அந்தப் பெண் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், சௌடேஸ்வரியின் தந்தை தனது பணபலத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முயன்றார். இவ்வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் (CI) வெங்கடரமணாவிற்குப் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து, கொலை வழக்கைத் திசைதிருப்பச் செய்துள்ளார். உடற்கூறாய்வு அறிக்கை உண்மையைச் உரக்கச் சொல்லியும், அந்த அதிகாரி வழக்கைச் சாதாரண மரணமாகவே கையாண்டுள்ளார்.
இந்த முறைகேடு குறித்து உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றதையடுத்து, லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் வெங்கடரமணா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். “சௌடேஸ்வரி இரண்டு முறை கொல்லப்பட்டுள்ளார்; முதலில் தந்தையாலும், இரண்டாவது ஊழல் நிறைந்த இந்த அமைப்பாலும்” என்று சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். யாரோ ஒருவர் துணிச்சலாகப் போராடியதால் மட்டுமே இன்று உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இல்லையெனில் அந்தப் பெண்ணின் மரண இரகசியம் அவருடனே புதைக்கப்பட்டிருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.
