அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் கோகோ பகுதியில் சோசப் டிங்வால் (37) என்பவன், தனது 5 வயது மகள் ஐரா மற்றும் 7 வயது மகன் ரெமி ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக தாய் ஒலிவியா வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்திருக்கவே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது இரண்டு குழந்தைகளும், கணவனும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அவர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோரச் சம்பவம் நடப்பதற்கு சற்று முன்பு, நள்ளிரவு 12:20 மணியளவில் இரண்டு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த தந்தை டோர் பெல் கேமராவின் வெளிச்சத்தில் வெளியே பயத்துடன் நடந்து செல்வதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்திருந்தும், சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பே இவர்களது வீட்டின் குடும்பத் தகராறு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக போலீசார் 11 முறை அங்கு சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை இத்தகைய கொடூரமான முடிவை எடுப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. சொந்தக் குழந்தைகளையே தந்தை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
