தஞ்சாவூர் மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(38). இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இந்த தம்பதியினருக்கு ஓவியா(12), கீர்த்தி(8), ஈஸ்வரன் (5)என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் சோசியல் மீடியா மூலம் நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நித்யா கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். அதன் பிறகு குடி போதைக்கு அடிமையான வினோத்குமார் குழந்தைகளை அடிக்கடி திட்டி வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த வினோத்குமார் ஓவியா, கீர்த்தி ஆகியோரை வெளியே சென்று விளையாடவும், தண்ணீர் எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.
அந்த சமயம் குழந்தைகள் வெளியே சென்றவுடன் ஈஸ்வரனை கொஞ்சுவது போல தூக்கி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டிற்கு வந்த இரண்டு மகள்களையும் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
