சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது 16 வயது பிளஸ்-2 மகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வீட்டு வேலைக்குச் செல்லும் நேரங்களைப் பயன்படுத்தி, குடிபோதையில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். தந்தையின் இச்செயலால் மனமுடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையைக் குறித்துத் தாயிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து மாணவியின் தாயார் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே மகளிடம் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
