திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள நாயன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், மாட்டுப் பொங்கல் விடுமுறைக்காகத் தனது ஊருக்கு வந்திருந்தார். பண்டிகை நாளன்று மீன் பிடிப்பதற்காகத் தனது இரு சிறு வயது மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஏரிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர்கள் வராததால் தேடிப் பார்த்தபோது, ஏரிக்கரையில் அவர்களின் செருப்புகள் மட்டும் தனியாகக் கிடந்ததைக் கண்டு உறவினர்கள் பதற்றமடைந்தனர்.
நீச்சல் தெரியாத நிலையில் ஏரிக்குள் சென்ற மூவரும், எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. கிராம மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் தந்தை மற்றும் மகன்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை காலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
