உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், காலையில் பூஜைக்காகப் பூ பறிக்க முயன்ற போது 23-வது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்த தந்தையும் அவரது 11 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள மகாகுன் மைவுட்ஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவர் ரன்தீப் பத்ரா (40).
இவரது மனைவி அதிகாலையில் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததால், வீட்டில் பூஜை செய்வதற்காக ரன்தீப் பத்ராவும் அவரது 11 வயது மகன் ஆரவும் வீட்டின் 23-வது மாடி பால்கனிக்குச் சென்று பூக்களைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகச் சிறுவன் ஆரவ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான். தன் கண்முன்னே மகன் கீழே விழுவதைக் கண்ட தந்தை ரன்தீப் பத்ரா, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பலத்த காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிஸ்ராக் காவல் நிலைய போலீசார் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகள் பால்கனியில் இருக்கும்போது பெற்றோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகள் பால்கனியில் இருக்கும்போது பெற்றோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
