கர்நாடக மாநிலம் கானகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப் செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டு வெடிகுண்டு வெடித்துப் பெரும் பீதியை ஏற்படுத்திய வழக்கில், மாவோயிஸ்ட் போல நடித்துப் பணம் பறிக்க முயன்ற கானகலபண்டே வெங்கடேஷ் என்பவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய வெங்கடேஷ், பூஷப்பா என்ற விவசாயியின் தோாட்டத்து வாசலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பெயரில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்றை ஒட்டிவிட்டு ஓடியுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வெங்கடேஷின் மனைவி சாவித்ரம்மா, அவரது இரு குழந்தைகள் உட்பட நால்வரைக் காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில், முதன்மை குற்றவாளியான வெங்கடேஷ் கடந்த 20 நாட்களாகக் கடமலகுண்டே மலைப் பகுதியில் தலைமறைவாகப் பதுங்கியிருந்தான்.
அவன் பவகடா மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, 150-க்கும் மேற்பட்ட போலிஸார் அந்த மலையைச் சூழ்ந்து பிரம்மாண்டத் தேடுதல் வேட்டையை நடத்தினர். இறுதியில், தப்பியோட முயன்ற வெங்கடேஷை போலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மாவோயிஸ்ட் போர்வையில் வெடிகுண்டு வெடித்துப் பணம் பறிக்க முயன்ற நபர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
