“நாளை மகள் கல்யாணம்.. கையில் 5 பைசா இல்லை!”… மண்டி வாசலில் கைகூப்பி கதறிய தந்தை… கண்கலங்க வைக்கும் அந்த சம்பவம்….!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேடி மண்டியில், விவசாயி ஒருவர் எதிர்கொண்ட அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை தனது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான செலவுகளைச் சமாளிக்கத் தனது கொத்தமல்லிப் பயிர்களை விற்க மண்டிக்கு வந்த அந்த விவசாயி, அங்கு ஏற்பட்ட குழப்பத்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளானார்.

மண்டியில் ஆய்வு செய்த அதிகாரி ராஜ்குமார் சர்மா, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் விவசாயியின் கொத்தமல்லி விளைச்சலுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தொகையைத் தவறாகக் குறைத்து எழுதியதால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் ஏல நடவடிக்கையை உடனடியாக நிறுத்தினர். இதனால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி, மகளின் திருமணத்தைக் குறித்த நேரத்தில் நடத்த முடியுமா என்ற அச்சத்தில் அந்த விவசாயி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

   

“தயவுசெய்து என் பயிரை வாங்குங்கள், நாளை என் மகளுக்கு திருமணம்” என்று கைகூப்பி அவர் கெஞ்சியபோதும், எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிற விவசாயிகளும் ஒன்றிணைந்து, தேசிய நெடுஞ்சாலையை மறித்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த உணர்ச்சிகரமான போராட்டம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை மற்றும் அதிகாரிகள் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறிழைத்த ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மண்டி செயலர் ஆர்.பி. சிங் தெரிவித்தார். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவே போராட வேண்டிய நிலை இருப்பது பெரும் வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.