இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உறவினரும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் இந்தத் திருமணத் தகவலை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, திருமண அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், தனது வசீகர புன்னகையுடன் கலகலப்பாகப் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் காவ்யா மாறனின் பெயரை உற்சாகமாகக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அதைச் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட அனிருத், தனக்குத் திருமணம் கூடிவந்திருக்கும் சூழ்நிலையைக் குறிக்கும் வகையில் தனது இசையமைப்பில் உருவான பிரபலமான “எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி” பாடலைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் திருமண மனநிலையை முழுமையாக அனுபவித்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். கிரீஸ் நாட்டில் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து சென்னையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
