வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி… வண்டி விலையை விட… நம்பர் பிளேட் விலை அதிகம்…! தமிழ்நாட்டில் பேன்சி நம்பர் கட்டணம் 2 மடங்கு உயர்வு… தமிழக அரசு கொடுத்த ஷாக்…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குவதற்கான கட்டணங்களை போக்குவரத்துத் துறை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. ஜூன் 2026-ல் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு திருத்தத்தின்படி, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கவும், அரசின் வருவாயைப் பெருக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள சீரிஸ் மற்றும் அடுத்தடுத்த சீரீஸ் எண்களுக்கான கட்டணம் ரூ.40,000-லிருந்து ரூ.80,000 ஆகவும், 5 முதல் 8 வரையிலான சீரீஸ் கட்டணம் ரூ.1,20,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதிக தேவையுள்ள 9, 10-வது சீரிஸ்களுக்கு ரூ.2 லட்சமும், 11, 12-வது சீரிஸ்களுக்கு ரூ.4 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 13 மற்றும் 14-வது அதிபிரீமியம் விஐபி எண்களுக்கு ரூ.8 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, முன்பு இருந்த நிலையான கட்டண முறை மாற்றப்பட்டு, இனி வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் புதிய கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.50,000-க்குட்பட்ட சாதாரண பைக்குகளுக்கு ரூ.2,000 முதல், வாகனத்தின் மதிப்பு உயர உயர கட்டணமும் அதிகரிக்கப்பட்டு, ரூ.30 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள அதிநவீன சூப்பர்பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர வாகனங்களுக்கான கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது; முன்பு ரூ.1,000 முதல் ரூ.16,000 வரை மட்டுமே இருந்த இந்தக் கட்டணம், இனி வாகனத்தின் மதிப்பைச் சார்ந்து குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

   

இந்த புதிய விதமுறைகளின் கீழ் பேன்சி எண்களைப் பெற விரும்பும் வாகன உரிமையாளர்கள், எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்களையோ அல்லது போலி முகவர்களையோ அணுக வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தற்போதைய நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று எண்களின் இருப்பை நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். தேவையான எண்களைத் தேர்வு செய்த பிறகு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து, பாதுகாப்பான முறையில் கட்டணங்களைச் செலுத்தி தங்களுக்குரிய சிறப்பு எண்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.