விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்ட பிரபல ரவுடி மோகன்ராஜ் என்பவர் மரக்கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், நேற்று நள்ளிரவு சரவணப்பாக்கம் கிராமப் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றவே, ஆத்திரமடைந்த கும்பல் மோகன்ராஜை சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மோகன்ராஜ் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொல நடந்த இடத்தில் முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட மோகன்ராஜ் மீது 2 கொலை வழக்குகள், கொள்ளை, மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூரக் கொலை பழைய பகை காரணமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது மதுபோதையில் ஏற்பட்ட உடனடி மோதலால் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தற்போது சந்தேகத்தின் பேரில் 4 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வரும் இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
