இசையுலகில் எப்படி இளையராஜாவை நம்மால் மறுக்க முடியாதோ, அதேப் போல், இவரது குரல் இல்லாமல் நம்மால் பாடல்களை கேட்க முடியாது எனலாம். தனது குரலிலேயே நவரசத்தையும் கலந்து கொடுத்த வித்தகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மத்திய அரசின் அனைத்து விருதுகளையும் தன்னிடத்தே வைத்திருப்பவர் எஸ்.பி.பி. 1966-ம் ஆண்டு தெலுங்கில் முதன் முதலாக தனது குரலால் பாட ஆரம்பித்தவர், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக 5 தலைமுறைகளையும் தனது குரலால் மயக்கி வைத்திருக்கிறார்.

#image_title
தமிழில் சாந்தி நிலையம் என்னும் படத்தில் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைத் தான் முதன் முதலாக பாடியிருந்தார். ஆனால் அப்படம் வெளிவரும் முன்பே, எம்.ஜி.ஆர்-ன் அடிமைப் பெண் படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளியானதால், அதுவே அவரது முதல் பாடலாய் மாறியது. கடந்த 2020-ம் ஆண்டு தான் இறப்பதற்கு முன்பு கூட தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு ஓப்பனிங் பாடலை பாடியிருந்தார் எஸ்.பி.பி. கொரோனா கொண்டு சென்ற சொக்கத்தங்கங்களில் எஸ்.பி.பியும் ஒருவர்.

#image_title
கிட்டத்தட்ட 16 மொழிகளில் பாடிய பெருமை என்பது அவரையே சாரும். ஒரு காலத்தில் இவரது கால்ஷீட்டுக்காக படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்குமாம். அதிலும் இளையராஜாவும், எஸ்.பி.பியும் இணைகிறார்கள் என்றால் நிச்சயம் அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி விடுமாம். 5 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் தன்னை ஐக்கியமாக்கி கொண்டவர், காலங்கள் மாற தனது திறமையையும் ஒருசேர அப்டேட் செய்து கொண்டவர் எஸ்.பி.பி. 16 மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர் என்பதால் இவரது பெயரை தாங்கி பெருமைக் கொண்டிருக்கிறது கின்னஸ் ரெக்கார்டு.

#image_title
இதுவரை உலகில் எந்தவொரு பாடகரும் செய்யாத சாதனை இது. இது மட்டுமின்றி கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்பெறாத இரண்டு ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார் எஸ்.பி.பி. அதாவது 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி காலை 9 மணிக்கு பாடத் தொடங்கியவர், தொடர்ந்து இரவு 9 மணி வரை 27 கன்னட பாடல்களை ஒரே நாளில் பாடி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரே நாளில் 19 தமிழ் பாடல்கள், 16 ஹிந்தி பாடல்கள் என பாடியுள்ளார் எஸ்.பி.பி. இவரது இந்த ரெக்கார்டுகளை முறியடிக்க வேண்டும் என்றால் இன்னும் 110 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
