மயிலாடுதுறை அருகே அரியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்த வைரமுத்து (28) என்பவர் மெக்கானிக் வேலை பார்த்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணும் இவரும் கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் சென்னையில் தங்கிய பணியாற்றி வரும் நிலையில் அவருடைய தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளார்.
தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த குடும்பத்தினர் தங்களுடைய மகளை நிராகரிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைரமுத்துவின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கும் வைரமுத்துவுக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால் சமாதானமான அந்த பெண் மீண்டும் வேலைக்காக சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வைரமுத்து மயிலாடுதுறையில் வேலை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது அடியமங்கலம் பிள்ளையார் கோவில் அருகே வைரமுத்துவை வழிமறித்த மர்மகும்பல் அவரை ஓட ஓட சரமாரியாக வெட்டிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தங்கள் மகன் கொலைக்கி அவரது காதலியின் குடும்பத்தினரை காரணம் என வைரமுத்துவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
