பஞ்சாப் மாநிலம் பரிட்கோட் மாவட்டத்திற்குட்பட்ட கொட்கபுரா பகுதியில், அமிர்தசரஸ் – பதிண்டா தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் 20 வயதேயான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண்ணின் சடலம் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்ற குடும்பத்தினரே இவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்து வயலில் வீசிச் சென்றதாகக் சந்தேகிக்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகப் பரிட்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சொந்தக் குடும்பமே பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த ஆணவக்கொலை கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காதல் திருமணம் செய்த பெண்ணைப் பெற்ற குடும்பத்தினரே கொலை செய்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
