மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராஜாராமின் மனைவி பிரேமா, தனது மகளின் திருமணச் செலவுக்காகச் சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த அசலுக்கு மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் வட்டி கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கொடூர நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கடந்த ஜூலை 13 அன்று புது மண்டபம் அருகே பிரேமாவை நேரில் வரவழைத்தக் கந்துவட்டிக்காரர்கள், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உடனையடி வட்டிப் பணத்தைக் தராவிட்டால் ஆடையைக் கலைத்து உயிருடன் விடமாட்டோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தத் தீவிர மன உளைச்சலால் நிலைகுலைந்த பிரேமா வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்று, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரேமாவின் உயிரிழப்புக்குக் காரணமான அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் மருத்துவமனைச் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் மீட்டர் வட்டி கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, பிரேமாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் திருப்பதி, கலையரசி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய நான்கு பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
