பெங்களூரில் டேட்டிங் செயலிகள் வழியாக ஆடவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் புதிய வகை இணைய மோசடிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. சமீபகாலமாக அதிகரித்து வரும் இந்த மோசடியில், மர்ம நபர்கள் டேட்டிங் செயலிகளில் போலியான பெண் கணக்குகளை உருவாக்கி, ஆண்களைச் சந்திப்பதாகக் கூறி உரையாடலைத் தொடங்குகின்றனர்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், சந்திப்பிற்குச் செல்லும் வழியில் தங்களுக்கு அவசரப் தேவை இருப்பதாகவோ அல்லது கேப் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த பணமில்லை எனக் கூறியோ போலியான கட்டணக் கோரிக்கைகளை அனுப்புகின்றனர். பெண்களின் பேச்சை நம்பி ஆடவர்கள் ஆன்லைன் மூலம் கேப் கட்டணத்தையோ அல்லது முன்பணத்தையோ அனுப்பிய பிறகு, அந்தப் போலிக் கணக்குகள் திடீரென மறைந்துவிடுகின்றன அல்லது பயனரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி பிளாக் செய்துவிடுகின்றன.
இத்தகைய சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் பழகும்போது நிதிப் பரிவர்த்தனங்களைத் தவிர்ப்பது, நேரில் சந்திக்கும் வரை பணம் அனுப்புவதைத் தவிர்ப்பது மற்றும் போலி கணக்குகளை அடையாளம் கண்டு உடனடியாக புகாரளிப்பது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
