கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டம் ஷாஹாபூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா முத்தவா, தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும் “வாழும் சாமியார்” என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்துள்ளார். கையில் வெள்ளை புறாக்களை ஏந்தி, அமைதியின் தூதுவர் போன்ற பிம்பத்தைக் கட்டமைத்த இவர், தன்னை நாடி வருபவர்களின் தீராத நோய்களையும் கஷ்டங்களையும் போக்க வல்லவர் எனப் பிரசாரம் செய்துள்ளார். இவர் கூறிய சில கணிப்புகள் தற்செயலாகப் பலித்ததால், அந்தப் பகுதி மக்கள் இவரை “அப்பாஜி” என அழைத்து, வீடுகளில் இவரது புகைப்படத்தை வைத்துப் பூஜிக்கும் அளவிற்கு முட்டாள்தனமாக நம்பியுள்ளனர்.
அமைதிப் புறாவாக வலம் வந்த மல்லிகார்ஜுனாவின் முகத்திரை, சமீபத்தில் அவர் செய்த அருவருக்கத்தக்கச் செயல்களால் கிழிந்துள்ளது. ஆசி வழங்குவதாகக் கூறி, பக்திப் பரவசத்தில் இருக்கும் பெற்றோர்கள் முன்னிலையிலேயே சிறுமிகளிடம் இவர் அத்துமீறியுள்ளார். புனிதமான இடமாக மக்கள் கருதும் சூழலில், சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தட்டிக் கேட்க முடியாதபடி ஆன்மீகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தனது கோக்குமாக்கு வேலைகளைத் தொடர்ந்துள்ளார். இந்த அத்துமீறல்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகார்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குழந்தைகள் நல அமைப்பின் கவனத்திற்குச் சென்றதும், அவர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மல்லிகார்ஜுனா செய்த அநாகரிகச் செயல்கள் உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பு அளித்தப் புகாரின் அடிப்படையில், யாத்கீர் போலீசார் மல்லிகார்ஜுனா முத்தவா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆன்மீகத்தின் பெயரால் குழந்தைகளைச் சிதைக்க முயன்ற இந்த போலிச் சாமியாரின் செயல் கர்நாடகாவையே அதிரவைத்துள்ளது.
தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் மல்லிகார்ஜுனா மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நம்பிக்கையைப் முதலீடாக வைத்துச் சிறுமிகளின் வாழ்வைச் சிதைக்கத் துணிந்த இவருக்கு, இந்த போக்சோ வழக்கு மூலம் உரிய “எண்டு கார்டு” போடப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்மீகப் போர்வையில் ஒளிந்திருக்கும் இதுபோன்ற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
