மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவிற்குள் செப்டம்பர் 7 அன்று ரோஹன் பிரேமல் பரேக் (24) என்பவர், தனது ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் நுழைய முயன்றார். தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களைத் தடுத்தபோது, தங்களை இந்திய அரசின் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் எனக் கூறி ஒரு போலி அடையாள அட்டையைக் காட்டி உள்ளே சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பிகேசி மற்றும் குற்றப்பிரிவு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரோஹன் பரேக் மற்றும் அவரது பாதுகாவலரான திலீப் ராஜாராம் குண்டே (49) ஆகிய இருவரைக் கைது செய்து, அவரிடமிருந்த ஒரு லைசென்ஸ் ரிவால்வர் மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் எஸ்பிளனேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைச் செப்டம்பர் 11 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பெற்றுள்ளனர். இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதேமேஷ் கணேஷ் பகுல் என்ற மூன்றாவது நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி அடையாள அட்டையில் வழங்கும் அதிகாரியின் பதவியோ அல்லது காலாவதியாகும் தேதியோ குறிப்பிடப்படவில்லை என்பதால், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, ரோஹன் பரேக் என்ற இளைஞர் தாமே ஏமாற்றப்பட்டிருக்கலாம் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். தருண் கபூர் என்பவர் ரோஹனுக்கு PMO அலுவலகத்தில் ஆலோசகர் பதவி தருவதாகக் கூறி, போலி மின்னஞ்சல்கள் மற்றும் இந்த அடையாள அட்டையின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனது நிச்சயதார்த்தப் பெண்ணுக்கு வாசனைத் திரவியம் வாங்கவே அவர் அங்கு சென்றதாகவும், பிரதமரின் வருகைக்கும் இந்தச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
