அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார். அவருக்குப் பதிலாக, புதிய மாவட்ட செயலாளராக கமலகண்ணன் என்பவரை நியமித்து தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் திடீர் பதவி மாற்றம் கரூர் மாவட்ட அதிமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட கமலகண்ணன், தனது ஆதரவாளர்களுடன் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அவரது தரப்பினர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். இந்தச் தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அங்கு பெருமளவில் குவியத் தொடங்கினர்.

   

இருதரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு கடுமையான வார்த்தை மோதலும், வாக்குவாதமும் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை மற்றும் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.