ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில், பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் வெடிபொருட்கள் (டெட்டனேட்டர்கள்) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை கடும் வெப்பம் காரணமாகத் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிவிபத்தின் வீரியத்தால், வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த இரட்டை விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்தில் அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்த நிலையில், சுமார் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் வெடிபொருட்களைப் பதுக்கி வைத்ததுதான் இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
