“கனிமொழியின் மாஸ்டர் பிளான்?”…. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விழுந்த திடீர் செக்…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவால் அலறும் அறிவாலயம்….!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் அமைதி காத்து வருவது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகு திமுக முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட முதல் நபரான இவர், அதற்குப் பிறகு கட்சி மேடைகளிலும் விஜய்க்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஆவேசமாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பணிகளில் கூட பங்கேற்காமல் திருச்செந்தூர் தொகுதி பக்கமே செல்லாமல் தூத்துக்குடியிலேயே முகாமிட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த திடீர் அமைதிக்கு திமுகவின் மறுசீரமைப்பு நகர்வுகளே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. வயது மூப்பு மற்றும் கட்சி விதிமுறைகள் காரணமாக இவரது மாவட்டச் செயலாளர் பதவி கைநழுவப் போவது உறுதியாகிவிட்டது. மேலும், இவர் பெரிதும் எதிர்பார்த்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா என்பதிலும் தற்போது வரை எந்தவொரு நிச்சயமும் இல்லை. இது குறித்து கட்சித் தலைமை தரப்பில் இருந்தும் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், அனிதா ராதாகிருஷ்ணன் கடும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

அதேசமயம், தனது மாவட்டச் செயலாளர் பதவியை தனது ஆதரவாளர் ஒருவருக்குப் பெற்றுத்தர அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், எம்பி கனிமொழியின் தலையீடு காரணமாக அந்த வாய்ப்பும் பறிபோகும் நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் மீனவ மக்கள் வசித்து வரும் நிலையில், திமுகவில் அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் நீடித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கனிமொழியின் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராகச் சமூக சமநிலையைப் பேணும் வகையில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கத் தலைமை முடிவெடுத்துள்ளது.

   

ஏற்கனவே தவெக தனது அமைச்சரவையில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்குப் பொறுப்பு வழங்கியுள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கவே திமுக இந்த அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளது. இந்த புதிய முடிவுகளால் மாவட்டத்தில் தனது செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற கவலையில் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தாலும், மூத்த நிர்வாகிகளை முற்றிலும் ஓரம்கட்டும் எண்ணம் திமுக தலைமைக்கு இல்லை என்பதால், அவருக்குக் கட்சி அமைப்பில் பொருத்தமான கௌரவப் பதவி ஒன்று வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.