“அம்மா மினி கிளினிக் டூ தவெக மினி கிளினிக்”… புதிய வடிவில் வரும் திட்டம்… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவச் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில், மாலை நேர மினி கிளினிக்குகள் புதிய வடிவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் சில திட்டமிடல் குறைபாடுகளால் நிறுத்தப்பட்ட இந்த மினி கிளினிக் சேவையை, தற்போதைய தவெக அரசு புதிய பொலிவுடன் மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான அறிவிப்புகள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் 22 மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நலம் AI’ வாட்ஸ்அப் சேவை மூலம் இதுவரை சுமார் 1.25 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணைய வழி புறநோயாளர் (OP) முன்பதிவு முறையை 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி, மிக எளிதாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். இத்தகைய நவீன முன்னெடுப்புகள் அரசு மருத்துவமனைகளின் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன.

   

சிகிச்சை வசதிகள் மட்டுமின்றி மருத்துவக் கல்வித் துறையிலும் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டை தற்போதைய அளவிலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்த இறுதி முடிவை எடுப்பார் என்றும் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். அரசின் இந்த புதிய மருத்துவக் கொள்கைகளும், மினி கிளினிக் திட்டமும் சாமானிய மக்களுக்குப் பெரும் பயனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.