திமுகவுக்கு விழுந்த அடுத்த பலத்த அடி…. ‘ப்ரைஸ் டேக்’ போட்டு ஆட்சி நடத்துவதாகக் கூறி கோவை கவுன்சிலர் அதிரடி விலகல்…. ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக கவுன்சிலரும், அக்கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளருமான பாபு, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் எவ்வித அங்கீகாரமும் இல்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். சாமானியர்களின் கட்சியாகத் தொடங்கப்பட்ட திமுக, இன்று ஒரு சிலரின் சுயநலத்தால் கார்ப்பரேட் நிறுவனத்தைப் போலச் செயல்பட்டு வருவதாக அவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

   

குறிப்பாக, திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவுன்சிலர் பாபு மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சியை வளர்ப்பதற்காகச் செந்தில் பாலாஜி கோவைக்கு வரவில்லை என்றும், சரியாக ‘கலெக்‌ஷன்’ செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சாடினார். மேலும், தனியாக அலுவலகம் அமைத்துப் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும், செந்தில் பாலாஜிக்கு அடிமைகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

   

திமுக ஆட்சியில் எந்த ஒரு மக்கள் பணியைச் செய்ய வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை நிலவுவதாகக் குறிப்பிட்ட பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘ப்ரைஸ் டேக்’ போட்டுத்தான் ஆட்சியே நடத்தப்பட்டது என்றார். வாரிசு அரசியலைச் சுட்டிக்காட்டிய அவர், உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி மூத்த தலைவர்கள் பின்னால் நிற்பது என்ன வகையான சமூக நீதி என்று கேள்வி எழுப்பினார். திமுக ஒரு மன்னராட்சி மற்றும் முதலாளித்துவக் கட்சியாக மாறிவிட்டதால், சாமானியத் தொண்டர்கள் உழைப்பிற்கு மதிப்பின்றிக் வெறும் வாக்காளர்களாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளனர் என்றும் வேதனை தெரிவித்தார்.

 

இறுதியாக, கோவையில் தற்போதைய தவெக ஆட்சி வந்த பிறகு இத்தகைய அவலங்கள் இல்லை என்று குறிப்பிட்ட பாபு, கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதால், இதுகுறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், திமுகவின் இந்தச் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் பல கவுன்சிலர்களும், முக்கிய நிர்வாகிகளும் இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்சியிலிருந்து விலக உள்ளதாக அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.